Thursday, December 27, 2018

வறுமையின் நிறம் சிவப்பு


          1980ல் கே.பி இயக்கத்தில் கமல் ஸ்ரீதேவி நடிப்பில் வெளி வந்த படம் வறுமையின் நிறம் சிவப்பு. 1970களில் இருந்த வேலையில்லாத் திண்டாட்டம் கதைக்களம். வேலை இல்லா பட்டதாரி இளைஞராகவும் பாரதியின் அபிமானியாகவும் கமல் அபாரமாக நடித்திருப்பார். அவர் எதிர் கொள்ளும் இன்னல்களுக்கு பாரதியார் கவிதைகள் சொல்லும் இடங்களும் படத்தின் இன்ன பிற காட்சிகளுக்கு பாரதி பாடல்கள் பின்னனியும் அருமையாக காட்சிப் படுத்த பட்டிருக்கும்.

பசிக் கொடுமையில் சாக்கடையில் விழுந்த  ஆப்பிளை கமல் சாப்பிட நினைக்கும் போது அதற்க்காக பட்டதாரிகள் அடித்துக் கொள்வது போல் ஏற்படும் கற்பனை அன்றைய பட்டதாரிகளின் நிலையை காட்சிப்படுத்துகிறது.. சுயவேலைவாய்ப்பு மூலம் வேலை இல்லாத்  திண்டாடத்தை போக்க வேண்டும் என்பதாக படம் முடிந்திருக்கும்..

அந்த கால கட்டத்தில் இருந்த பிரச்சனைகளையும் அதற்கான தீர்வையும் தருவதாக அமைந்த இந்த படம் my all time favorite..

கமல் ஸ்ரீதேவியின் கெமிஸ்ட்ரிக்கு இந்த படமும் விதி விலக்கல்ல :)  MSV இசையில் கமலும் ஸ்ரீதேவியும் கவதையிலேயே பாடுவது போல் அமைந்த சிப்பி இருக்குது  முத்தும் இருக்குது  பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்..


Wednesday, September 12, 2012

காதல் துளிர்

கண்கள் சந்திக்கும் கணப்பொழுதுகள்...
மனங்கள் துடிக்கும் அருகாமைகள்...
சொல்லிவிட துடிக்கும் இதயங்கள்...
அதைத் தடுக்கும் தயக்கங்கள்...
சமயத்தில் கன்னங்கள் சிவக்க வைக்கும்
இந்த நிலைக் காதலின் ஆனந்த நிலை....

Thursday, January 5, 2012

ஏக்கம்

உனக்கு பிடித்தவைகளையே
நான் இன்னும் மறக்கவில்லை .......
பிறகு உன்னை எப்படி?

Friday, December 2, 2011

மகிழ்ச்சி VS கவலை

நீ எப்படி எப்பவுமே சிரிச்சுட்டே இருக்க? என்னைப் பார்க்கும் பலர் என்னிடம் கேட்கும் கேள்வி. இன்னும் பல பேர் இதே கேள்வியை என்னிடம் கேட்காமல் மனதில் கூட நினைத்திருக்கக் கூடும். இன்னும் சில பேர் என்னிடம் கேட்கும் கேள்வி "உனக்கு வாழ்கையில எந்தக் கவலையுமே இல்லையா?" என்பது. இந்த கேள்விகள் எனக்கு மிகவும் விசித்திரமானதாகப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் இந்த கேள்வி கேட்பவர்கள் விசித்திரமானவர்களாகத் தெரிகிறார்கள். ஏன் வாழ்வில் கவலையே இல்லை என்றால் தான் சிரிக்க வேண்டும் என்று எதாவது சட்டம் உள்ளதா? இன்னும் சொல்லப் போனால் வாழ்க்கையில் பெரிய கவலை உள்ளவர்கள் தான் நிறைய சிரிக்க வேண்டும்.அது முழுமையாக கவலையை நீக்காவிடினும் கவலையின் தாக்கத்தை குறைக்க உதவும். அதுசரி மனதில் பெரிய கவலை இருக்கும் போது எப்படி சிரிக்க முடியும் என்று கேட்கிறீர்களா?

கவலை பெரிதோ சிறிதோ எதுவாகினும் நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் தானே இருக்கிறது. ஏன் இன்னும் சொல்லப் போனால் கவலையையே கவலையாகப் பார்க்காமல் அனுபவமாகப் பார்ப்பவர்கள் எத்தனை பேர் உள்ளனர்.விரல் விட்டு எண்ணி விடலாமா? ஆனால்
இந்தப் பார்வை வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். நாம் வாழும் வாழ்க்கை எல்லாமே நிறைந்தது. அதை அனுபவிக்கத்தான் நாம் உள்ளோம். இங்கே வாழ்கையை அனுபவித்தல் என்பது வெறும் இன்பத்தை மட்டுமே குறிக்காது. இந்தத் தெளிவு இருந்தால் நாம் கவலையை சுலபமாக கடந்து விடலாம்.

நாம் கடக்கும் அனுபவம் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்குமேயனால் அந்த அனுபவத்தை நினைவில் கொள்ளலாம். பின்னாளில் நாம் அதை நினைவுகூறும் போது மனதிற்கு இன்னுமொரு மகிழ்ச்சியான தருணத்தை உருவாக்கும். அதே அனுபவம் நமக்கு கசப்பானதாக இருக்குமேயானால் அதிலிருந்து வரும் பாடத்தை மட்டும் கற்றுக் கொண்டு சம்பவத்தை மறந்து விட வேண்டும். இந்தப் பாடம் மனதில் இருக்கும் வரை நாம் மீண்டும் அந்த மாதிரி ஒரு கசப்பான அனுபவத்தை சந்திக்க நேராது. சரி மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்னென்ன செய்யலாம்.

- எப்பவுமே ஜாலியா இருக்கறவங்க கூட பழகுங்க. Tention party கள், சிடு மூஞ்சி சின்னப்பாக்கள விட்டு கொஞ்சம் தள்ளியே இருங்க. ஏனா அந்த மாதிரி ஆளுங்க அவங்களும் சந்தோஷமா இருக்க மாட்டாங்க. நம்ம சிரிச்சு சந்தோஷமா இருந்தாலும் விடமாட்டாங்க.

- நண்பர்கள் யாராவது மொக்க ஜோக் அடித்தாலும் பலமாக சிரிக்கலாம். இப்படி சிரிக்கரதுனால உங்களுக்கும் நல்லது. ஜோக் சொல்றவங்களும் சந்தோஷப்படுவாங்க.

- ஒவ்வொரு தடவையும் மனதிற்கு எதாவது கவலை ஏற்பட்டு மனது வருத்தம் படும் போது ,"இந்த விஷயம் நம்ம மகிழ்ச்சியைக் கெடுக்குது இதப் பத்தி இனி நம்ம think பண்ணக் கூடாது" என்று நினைத்து கொள்ளுங்கள். இதை படிக்கும் போது இதெல்லாம் அப்பத் தோணாது, இது over feelings ஆ இருக்கு என்று நினைப்பவர்கள் ஒரு முறை இதை செய்து பார்த்தால் பலனை அறியலாம்.

- அலுவலகத்தில் பணி புரியும் சக ஊழியர்கள், அண்டை வீட்டார் , அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் எதிர்ப்பட்டால் சிநேகமாக சிரிக்கலாம். நாம் ஒவ்வொரு முறையும் சிரிக்கும் போது நமக்குள் மன அழுத்தத்தை குறைக்கும் harmone சுரக்கிறது என எங்கேயோ படித்த ஞாபகம். (இப்டி சிரிக்கரதுனால இதனோட அருமை தெரியாத சிலர் உங்கள Loosuனு கூட நினைக்கலாம் ஜாக்கிரதையா handle பண்ணுங்க)

- மறதி- நான் முன்பே குறிப்பிட்டவாறு மனதிற்கு கவலை அளிக்கக் கூடிய எதையும் எப்போதும் நினைவுக் கூறாதீர்கள். நினைவுக் கூறாமல் இருந்தாலே நாளடைவில் அது மறந்து விடும்.

- இறந்த காலத்தில் நடந்ததை நினைத்து வருத்தப்பட வேண்டாம். நம்ம வருங்காலம் எப்படி இருக்குமோனு நினைச்சு கவலைப் படவும் வேண்டாம். இந்த இரண்டுமே உங்களுடைய நிகழ்கால மகிழ்ச்சிக்கான எதிரிகள்.

- எனக்கு மட்டும் ஏன் கடவுள் இவ்ளோ கஷ்டத்த தர்ரானு நினைக்காதிங்க. அதிக திறன் உள்ள குதிரையின் மேல் தான் அதிக சுமை வைப்பார்களாம். அதனால கவலையை விட்டுவிட்டு அதைத் தாங்கி நிற்கின்ற உங்கள் மன வலிமையை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.

இவையனைத்தும் நான் எப்போதுமே சிரித்துக் கொண்டே இருப்பதற்கான காரணங்கள். :) பிடித்திருந்தால் நீங்களும் கடைப்பிடிக்கலாமே!

பி. கு : உங்கள் சிரிப்பு மற்றவர்களை புண்படுத்தாதபடி பார்த்துக் கொள்வது மிக அவசியம்.

Saturday, September 17, 2011

தந்தை பெரியார்

இன்று தந்தை பெரியாரின் 133 வது பிறந்த நாள். அவர் இயற்கை எய்தி கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் பெரியார் கனவு கண்ட சமுதாயம் முழுதாக உருவாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பெரியாரின் கொள்கைகளில் எனக்கு ஈடுபாடு உண்டு (அதற்காக நான் நாத்திகவாதி என்று நினைத்து விட வேண்டாம். நமக்கும் அப்பாற்பட்ட நம்மை விட வலிமை மிகுந்த ஒரு சக்தி உண்டு என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது). பெண்கள் இன்று பல துறைகளில் கால் பதித்து ஆண்களுக்கு நிகராக இன்னும் சொல்லப் போனால் ஆண்களைக் காட்டிலும் அதிகமாக சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு பெரியாரும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது. பெண் அடிமைத்தனத்தினால் நமக்கு இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னர் வாழ்ந்த பெண்கள் எல்லாம் பல விதமான கொடுமைகளை அனுபவித்திருக்கிறார்கள். ஜாதி என்னும் பெயரில் மக்களுக்கு நடந்த கொடுமைகளை களைவதில் பெரும் முயற்சி எடுத்து அதில்
வெற்றியும் பெற்றுள்ளார். ஆனால் இன்றும் இவையனைத்தும் தீர்க்கமாக மாறி விட்டதா எனக் கேட்டால் பல தரப்பிலிருந்தும் இல்லை என்று தான் பதில் எழும். இந்த அவலங்கள் இனியாவது முற்றிலும் மாற வேண்டும் என்ற ஆசையுடன் அவருடைய பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Wednesday, September 14, 2011

இப்படியும் சில மனிதர்கள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான சாந்தன்,பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பல அமைப்புகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை அலுவலகம் வரும் வழியில் சுவரொட்டி ஒன்றை பார்த்து சற்றே அதிர்ந்து தான் போனேன். ராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் அதில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டுமென்றும் சுவரொட்டியில் அச்சடித்து இருந்தார்கள். என்னதான் காங்கிரஸ் கொள்கை வாதிகளாக இருந்தாலும், மனித நேயம் என்பது சிறிதும் இல்லையா என்ன. அவர்கள் மூவர் செய்ததும் தவறாகவே இருக்கட்டும் ஆனால் அதற்காக அவர்கள் ஆயுள் தண்டனைக் காலத்தை காட்டிலும் அதிக ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டார்கள். தவறு மனிதனின் இயல்பு. தண்டனை என்பது மனிதனின் தவறை திருத்துவதற்காக இருக்க வேண்டுமே தவிர மனிதனையே அழிப்பதாக இருக்கக் கூடாது. இந்த சின்ன விஷயத்தை கூட புரிந்து கொள்ளாமல் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கும் அவர்கள் என்ன விதமான மனிதர்கள். ஆனால் இப்படியும் சில மனிதர்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Thursday, August 25, 2011

நினைவுகள்!!!!

மருந்திட முடியா
ரணமாய் நினைவுகள்....
நிதர்சனமற்ற நிகழ்வுகளால்
கட்டப்பட்ட நினைவுகள்...
காலை கண் விழித்தவுடன்
விழித்துவிடும் நினைவுகள்..
இரவு உறங்கிய பின்னும்
கனவுகளாய் நினைவுகள்...
என்னையும் அறியாமல்
எல்லாவற்றிலும் மனதைக்
கவ்வும் நினைவுகள்..
மறந்திட நினைக்கும் நினைவுகளில்
உயிர்ப் பெற்று விடுகிறது
இந்த நினைவுகள்!!!!